
மும்பை, பிப். 27- ரயில் பயணிகள் உணவு பெறும் வசதியை மேம்படுத்தும் வகையில், ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் இணைந்து ‘புட் ஆன் டிரெயின்’ எனும் உணவு சேவையை இந்தியா முழுவதும் 152 ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து ஸ்விக்கி நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் மாலு கூறியதாவது: கடந்த 2025-ல் 70 ரயில் நிலையங்களில் மட்டுமே இருந்த உணவு சேவை, 2026 பிப்ரவரிக்குள் 152 நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பயணிகளிடையே நிலவும் பல்வகை தரமான உணவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஐஆர்சிடிசி மூலமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய அளவிலான முக்கிய ரயில் நிலையங்களிலும் கவனம் செலுத்த ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. இதில் ம.பி.யின் இட்டார்சி, தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் மேற்கு வங்கத்தின் கரக்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஹோலி சிறப்பு சலுகையாக பிப்ரவரி 28 முதல் மார்ச் 8-ம் தேதி வரை ரயில் பயணிகளுக்காகச் சிறப்பு உணவுப் பட்டியலை ஸ்விக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு தீபக் கூறினார்.















