Home செய்திகள் தேசிய செய்திகள் ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில்..துரோகி என எழுதிய ஆம் ஆத்மியினர்

ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில்..துரோகி என எழுதிய ஆம் ஆத்மியினர்

புதுடெல்லி: ஏப்ரல் 26-
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுக்கு தாவியிருக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் ஹர்பஜன் சிங் வீட்டின் சுவற்றில் துரோகி என எழுதியிருக்கிறார்கள்.
ஆம் ஆத்மியின் முகமாக அறியப்பட்ட ராகவ் சதா, கட்சியின் வியூக வகுப்பாளரான சந்தீப் பகத் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ராகவ் சதா சந்தீப் பகத் ஸ்வாதி மாலிவால் ஹர்பஜன் சிங் ராஜேந்தர் குப்தா அசோக் மிட்டல் விக்ரம் சாஹ்னி ஆகியோர் பாஜகவுக்கு தாவியிருக்கின்றனர். இவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமே! என்று கேள்வி எழலாம். அங்குதான் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் 3-ல் 2 பங்கு (2/3rd) உறுப்பினர்கள் பிரிந்து சென்று மற்றொரு கட்சியுடன் இணைந்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அவர்களின் எம்பி பதவியும் பறிபோகாது.
ஆம் ஆத்மிக்கு மொத்தம் 10 எம்பிக்கள் உள்ளனர். அதில் 7 பேர் (அதாவது 2/3 பங்குக்கும் மேல்) வெளியேறியுள்ளதால், அவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடக்க காலத்திலிருந்தே பயணித்த 37 வயதான ராகவ் சதா, ஊழலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட கட்சி இப்போது நேர்மையான அரசியலில் இருந்து விலகிச் செல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் திடீர் மாற்றத்தால் ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் வீட்டின் சுவர்களில் “கடார்” (துரோகி) என்று எழுதித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் அரசியலில் இது ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.