
பெங்களூரு, ஜூன் 4-
வெளிநாடுகளில் நடக்கும் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வைப்பதாகக் கூறி, வீரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ‘கேலோ மாஸ்டர்’ அமைப்பின் நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.
இவ்வமைப்பின் பொருளாளர் சோமையா, தலைவர் பிரசன்னா, செயலாளர் மது மற்றும் மேலாளர் தேஜஸ்ரீ ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா அமர்வு விசாரித்தது. இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, இந்த மனுவை நீதிமன்றம் முடித்து வைத்தது.
விசாரணையின் போது நீதிபதி கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்:
ஏழை ஹாக்கி வீரர்களை ஏமாற்றியுள்ளீர்கள். இதேபோல் கிரிக்கெட் வீரர்களை உங்களால் ஏமாற்ற முடியுமா? சாத்தியமே இல்லை! நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதால் இந்த வழக்கில் விசாரணை கட்டாயம் நடக்க வேண்டும். விளையாடியது ஹாக்கி, ஆனால் எதையும் நீங்கள் பாக்கி வைக்கவில்லை!”
என்று சாடினார்.
முன்னதாக மனுதாரர் தரப்பில், “முதலில் கொரியாவில் நடக்கும் போட்டிக்கு அழைத்துச் செல்வதாக 15 வீரர்களிடம் தலா 15,000 ரூபாய் வாங்கப்பட்டது. விசா ஆவணங்கள் தராததால் அது நடக்கவில்லை. பின்னர் ஆஸ்திரேலிய போட்டிக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டது. அதற்கும் விசா கிடைக்கவில்லை. ஆனால், இலங்கை போட்டிக்கு வீரர்களை அழைத்துச் சென்றோம்” என வாதிடப்பட்டது.
இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
புகார்தாரர் தரப்பில், “ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி 17 பேரிடம் தலா 1.30 லட்சம் ரூபாய் வங்கி மூலமும், 1.70 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் வாங்கப்பட்டுள்ளது. வீரர்கள் பெயரில் பெற்ற ஸ்பான்சர்ஷிப் தொகையையும் தங்களது சொந்த கணக்கில் மாற்றியுள்ளனர்” என்று விவரிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி எத்தனை முறை மக்களை ஏமாற்றுவீர்கள்? கொரியா, ஆஸ்திரேலியா, இலங்கை. என உங்களை விட்டிருந்தால் வேறு எங்கோ கூட்டிச் சென்றிருப்பீர்கள் போலிருக்கிறது! குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.




















