
புதுடெல்லி: ஜூன் 19-
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்-யுஜி’ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மத்திய அரசு ‘டெலிகிராம்’ செயலிக்கு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உறுதி செய்துள்ளது. தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும், தேர்வின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் சரியானது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69ஏ-ன் கீழ் மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தேஜஸ் கரியா அமர்வு தள்ளுபடி செய்தது. “அரசின் இந்த நடவடிக்கை மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாடே ஆகும். இதை தேவையற்ற அல்லது எல்லை மீறிய நடவடிக்கை என்று சொல்ல முடியாது” என நீதிமன்றம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட்-யுஜி தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் மற்றும் முறைகேடுகள் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கினை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, ஜூன் 22ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், திட்டமிட்டு மோசடி செய்யும் கும்பல், தேர்வர்களை ஏமாற்றவும், வினாத்தாள்களைப் பகிரவும் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஜூன் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளை எடிட் (Edit) செய்யும் வசதியையும் ஜூன் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து டெலிகிராம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா வாதாடுகையில்: மற்ற சமூக ஊடகங்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, டெலிகிராமை மட்டும் குறிவைப்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 14-க்கு எதிரானது. அரசு கொடுத்த லிங்க்குகளை ஒரே மணி நேரத்தில் நீக்கிவிட்டோம். நீட் முறைகேடு தொடர்பான 900-க்கும் மேற்பட்ட லிங்க்குகள் ஏற்கனவே பிளாக் செய்யப்பட்டுள்ளன. நிலைமை இப்படி இருக்க, தேர்வு முறைகேட்டை நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து என்று சித்தரித்து, செயலியைத் தடை செய்திருப்பது மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு” என்று வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில்: மீண்டும் வினாத்தாள் கசிவதைத் தடுக்க, தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு எடுத்துள்ள மிகச்சரியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை இதுதான். டெலிகிராமின் பிரத்யேக சாப்ட்வேர் வடிவமைப்பு மற்றும் அதன் ரகசியத்தன்மை விதிகளால், புலனாய்வு அமைப்புகள் உடனடியாக தலையிடுவது கடினம். மேலும், கணக்கை (Account) டெலீட் செய்துவிட்டால், அதிலுள்ள தரவுகளும் செய்திகளும் முற்றிலும் அழிந்துவிடும் என்பதால், ஆதாரங்கள் அழிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது” என்று நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் விளாக்கினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.





















