
நியூயார்க்: டிசம்பர் 23-
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர், அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தினர்.
என்.சி.பி., யின் தொழிலாளர் அமைப்பான, ‘ஜதியா ஸ்ராமிக் சக்தி’யின் குல்னா பெருநகரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான முகமது மொதாலெப் சிக்தார் என்பவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் வன்முறை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அவர், ”வங்கதேசத்தில் நாம் கண்ட வன்முறை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்,’ என்றார். இது குறித்து ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது: அது வங்கதேசமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நாட்டிலாவது சரி, பெரும்பான்மை இல்லாத மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். தற்போது வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம், என தெரிவித்தார்.
















