ஹைதராபாத் இளைஞரை போர் புரிய வைத்த கொடூரம்.. இந்தியர் பலி

மாஸ்கோ, அக். 23- கட்டட துறை சார்ந்த பணிக்கு ரஷ்யா சென்ற ஹைதராபாத் இளைஞரை ஏமாற்றி பயிற்சி கொடுத்து உக்ரைனுக்கு எதிராக போர் புரிய வைத்த கொடூரம் நடந்துள்ளது.
அதுமட்டுமின்றி துப்பாக்கியை கழுத்தில் வைத்து போர் புரியாவிட்டால் கொன்றுவிடுவோம். அதன்பிறகு ட்ரோன் தாக்குதலில் இறந்ததாக கூறி விடுவோம் என்று ரஷ்யா மிரட்டியதாகவும், தன்னுடன் போர் புரிந்து வந்த ஒரு இந்தியர் இறந்துவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. அதேவேளையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவில் வேலை தருவதாக கூறி இந்தியர்களை சிலர் அங்கு அனுப்புகின்றனர். அவ்வாறு செல்லும் இந்தியர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கி உக்ரைன் போரில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ரஷ்யாவின் சலுகைகளை நம்பி இளைஞர்கள் யாரும் ஏமாற வேண்டாம். அந்த நாட்டின் ராணுவத்தில் சேர வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இருப்பினும் கூட சில இந்தியர்கள் ரஷ்யா வேலை வாய்ப்புகளை நம்பி சென்று பயிற்சி முடித்து உக்ரைன் – ரஷ்யா எல்லையில் போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி 27 இந்தியர்கள் ரஷ்யாவுக்காக போர் புரிந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இந்நிலையில் தான் ரஷ்யாவுக்காக இருநாட்டு எல்லையில் போர் புரிந்து வரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பெயர் முகமது அகமது. இவர் கட்டட துறையில் பணியாற்ற ரஷ்யாவுக்கு சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலமாக ரஷ்யா சென்றார். ஆனால் ரஷ்யாவில் இறங்கியவுடன் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது போர் புரிய வைத்துள்ளனர்.