
ஜோகன்னஸ்பர்க், டிச. 29- சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளது. 2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன், தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் (SA20) சிறப்பான ஆல் ரவுண்ட் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோன ரவிச்சந்திரன் அஸ்வின், அவரை வெகுவாகப் பாராட்டித் தள்ளி இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 லீக்கில், சென்னை சூப்பர் கிங்ஸின் சகோதர அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (JSK), தனது முதல் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அகீல் ஹொசைன் தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார். 10 பந்துகளில் மேஜிக்: முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் அணி, ஒரு கட்டத்தில் ரன் குவிக்கத் திணறியது. அப்போது களமிறங்கிய அகீல் ஹொசைன், வெறும் 10 பந்துகளில் 22 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவரது இந்த அதிரடியால் அணியின் ஸ்கோர் 168-ஐ எட்டியது. பேட்டிங்கில் கலக்கிய கையோடு பந்துவீச்சிலும் மிரட்டினார். 169 ரன்களைத் துரத்திய பிரிட்டோரியா அணியைக் கட்டுப்படுத்தியதில் அகீல் ஹொசைனுக்கு முக்கிய பங்குண்டு. மிகத் துல்லியமாகப் பந்துவீசிய அவர், 19 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இவரது இந்தச் சிறப்பான செயல்பாட்டால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.




















