11ஏ விமான இருக்கை – உலகிலேயே அதிகம் வெறுக்கப்பட்ட சீட்

அகமதாபாத், ஜூன் 13- அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த ஒரேயொரு பயணி மட்டும் காயங்களுடன் தப்பி பிழைத்துள்ளார். இதனால் 11ஏ இருக்கை தொடர்பான விவாதங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. விமானத்தில் பயணிப்போர் அதிகம் வெறுத்த இருக்கையாக 11ஏ இருந்து வந்த நிலையில், தற்போது உலகின் பாதுகாப்பான இருக்கை என்று பெயர் அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் விமானத்தில் இருந்த ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா என்ற நபர் மட்டும் தப்பி பிழைத்துள்ளார். தப்பி பிழைத்த ஒரே நபர் அவர் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் உள்ள 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். இந்த 11ஏ இருக்கை ஜன்னல் ஓரத்தில் எகானமி வகுப்பின் முதல் வரிசையில் இருக்கும் இருக்கையாகும். அதேபோல் நெருக்கடியான நேரத்தில் வெளியேறும் அவசர வழியை ஒட்டி அமைந்துள்ள இருக்கை தான் 11 ஏ. விபத்து நடப்பதற்கு சில வினாடிகள் முன்பாக பயணிகளுக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரமேஷ் விஸ்வக்குமார் பதற்றம் கொள்ளாமல் தயாராக இருந்துள்ளார். சீட் பெல்ட்டை கழற்றிய அவர், விமானம் தரையில் அருகே வந்த போது சரியான நேரத்தில் சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அங்கிருந்து குதித்துள்ளார்.