13 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்டில் இந்திய அணி எடுத்த ஆயுதம்

கொல்கத்தா, நவ. 14- தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருப்பது மோசமான முடிவு என கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்திருக்கிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் சொந்த மண்ணில் நடைபெறும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் ஆரம்ப கட்டத்தில் வேகப்பந்துவீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் சாதகமாக செயல்படும். போகப் போக சுழற் பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டு அல்லது மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது கம்பீர் அதிகபட்சமாக நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்துள்ளார். குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர்பட்டேலை சேர்த்துள்ள கம்பீர், பேட்டிங் வரிசையின் மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு அங்கு வாஷிங்டன் சுந்தரை சேர்த்துள்ளார். இது குறித்து விமர்சித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்பளே, நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது தேவையில்லாதது. சுழற் பந்துவீச்சாளர்கள் எப்போதுமே ஒரே கட்டத்தில் அதிக ஓவர்களில் வீச விரும்புவார்கள். குறைந்தபட்சம் தொடர்ந்து ஏழு எட்டு ஓவர்கள் வீசினால் மட்டுமே அவர்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியும். இப்படி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால் ஏதோ ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கு குறைவான ஓவர்களையே கில் வழங்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தற்போது நாம் டாசை இழந்து இருக்கின்றோம். முதலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். முதல் சில ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அப்படி இருக்கும் போது நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இதன் மூலம் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த முடிவு விவாதத்திற்குரியது என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்களும், கம்பீரின் இருந்த முடிவு ஆச்சரியம் அளிப்பதாகவும் பரிசோதனை முயற்சி என்ற பெயரில் கம்பீர் காமெடி செய்து வருவதாகவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.