17வது குழந்தை பெற்றெடுத்த பெண்

உதய்பூர்: ஆக.28-
ராஜஸ்தானின் உதய்பூரில், 55 வயது பெண், 17வது குழந்தையை பெற்றெடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா, 55. அவரது கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு காவ்ரா குடும்பத்தை கவனித்து வருகிறார்.
ஏற்கனவே 16 குழந்தைகளுக்கு தாயானவர் ரேகா. அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. எஞ்சிய குழந்தைகளில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட்டது. மற்றவர்கள் தற்போது திருமண வயதை தொட்டுவிட்டனர்.
இந்நிலையில், 17வது முறையாக ரேகா கர்ப்பமடைந்தார். குடும்பத்தில் வறுமை வாட்டினாலும், குழந்தையை பெற்றெடுக்க காவ்ரா – ரேகா தம்பதி உறுதியுடன் இருந்தனர். இதையடுத்து, சமீபத்தில் ரேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட, அருகில் இருந்த தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்திருப்பதை மறைத்து, ஐந்தாவது பிரசவம் எனக் கூறி சேர்த்துள்ளனர். தற்போது குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். வறுமையில் வாடும் ரேகா குடும்பத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறந்திருப்பது அப்பகுதி மக்களை மட்டுமின்றி, 17வது குழந்தை என உண்மை அறிந்த மருத்துவர்களும் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.