
சென்னை: ஆக. 10-
இன்றும் நாளையும் முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், உடுமலைப்பேட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இந்த பயணத்தின் போது ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஸ்டாலின் உடல்நலம் பெற்றுள்ள நிலையில், இன்று மாலை கோவை பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை 5.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஸ்டாலின், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அப்போது 2 மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 6.50 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நரசிங்கபுரத்திற்கு புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், இரவு 8.50 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.இதன்பின் இரவு உடுமலைப்பேட்டையில் தங்கும் ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு நேதாஜி மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.