
சிட்னி: ஜூலை 17-
மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகுகளில் மலேசியாவுக்கு புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்கும் மேற்பட்டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்கள் தெரிவிக்கின்றன.மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். அப்போது அங்கு இனப் படுகொலை நடைபெற்றது. சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் மியான்மரில் இருந்து வெளியேறி வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் மியான்மரின் மேற்கு ராகைன் மாநிலத்திலிருந்து கடந்த ஜுன் மாத இறுதியில் இரு படகுகள் மலேசியா புறப்பட்டுள்ளன.
இவற்றில் மியான்மர் மற்றும் வங்கதேச அகதி முகாம்களில் இருந்த 500-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். 250 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது. 280 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகு கடந்த 8-ம் தேதி அன்று மியான்மரின் அயேயர்வாடி கடற்கரைக்கு அப்பால் மூழ்கியதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (ஐஓஎம்), ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையம் (யுன்எச்சிஆர்) ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மியான்மர் கடல்சார் அதிகாரிகள் பலமுறை ரோஹிங்கியாக்களை கடலிலேயே தவிக்கவிட்டுள்ளனர். ஆபத்தில் இருக்கும் படகுகள் குறித்த தகவல்களை அவர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். வங்கக் கடலில் ரோஹிங்கியாக்கள் சென்ற 2 படகுகள் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இதுகுறித்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் ஆகியவை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.













