
சேலம்: நவம்பர் 7-
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நகையை கொள்ளையடித்து 2 மூதாட்டிகளை கொன்று கல்குவாரி குட்டையில் வீசிய வழக்கில் அய்யனார் என்பவரை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி பெரியம்மா(75). இவர் ஆடு வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வார். இவர் கடந்த 4ம் தேதி வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்றார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது தூதனூர் காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் அவர் பிணமாக மிதந்தார். அவருடன் இன்னொரு பெண்ணின் உடலும் மிதந்தது. விசாரணையில் இன்னொரு பெண் இ.காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரது மனைவி பாவாயி(70) என்பதும் அவர் விவசாய கூலிவேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் 2 பேரும் எப்படி இறந்தனர்? என்பது தெரியவில்லை. இருவரும் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து இறந்தனரா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் தான் பெரியம்மா அணிந்திருந்த இரண்டு கம்மல், மூக்குத்தி, கால் காப்பு. பாவாயி அணிந்திருந்த கம்மல், கால் காப்பு ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனால் நகைக்காக அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வந்தது.மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சேலம் அடுத்த கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார்(55) என்பவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் வந்தது.மேலும் அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அய்யனார் பற்றி விசாரணை மேற்கொண்டனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அய்யனாரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தான் இன்று காலையில் அய்யனார் சங்ககிரி அருகே பதுங்கியிருந்தார்.இதுபற்றி அறிந்த போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்க முயன்றார்.இதனால் போலீசார் பாதுகாப்பு கருதி அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அய்யனாரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
















