டெல்லி, நவ. 28- 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சிஐஏ மற்றும் மொசாட் உள்ளிட்ட இரு உளவு அமைப்புகளின் சதியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை அமைத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றார். அதேபோல் கடந்த முறையை போல் இம்முறை பாஜகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க முடியவில்லை.
அதேபோல் கடந்த இரு தேர்தல்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாடு இந்திய அரசமைப்பு சட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசிய கருத்து விவாதமாகி இருக்கிறது.
அதில் காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசுகையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 206 இடங்களையும் வென்றது. இந்த போக்கின்படி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 250 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வெறும் 44 இடங்களாக குறைந்தது. அப்போதுதான் சில அமைப்புகளின் ஆட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாமல், இந்தியாவிற்குள் எந்த விளையாட்டையும் நம்மால் ஆட முடியாது என்று சில அமைப்புகள் செயல்பட்டன. அவற்றில் ஒன்று சிஐஏ.. மற்றொன்று இஸ்ரேலின் மொசாட் அமைப்பு.. இந்த இரு அமைப்புகளும் இந்தியாவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தன. மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,
அவர்களால் இந்தியாவில் தலையிட்டு தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது என்று கருதினார்கள். இந்த இரு உளவு முகமைகளும், டெல்லியில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கருதினர். ஆனால் அது காங்கிரஸ் அரசாக இருக்கக் கூடாது என்றும் நினைத்தனர்.















