பெங்களூரு, டிச.17- பெங்களூரில் டிச. 20 முதல் 29ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் மதிப்புறு தலைவர் பேரா.முனைவர் கு.வணங்காமுடி செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 2022ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் நடைபெற்ற இரண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழாகளும் சிறப்பாக நடைபெற்றதற்கு தமிழ் ஊடகங்கள்தான் முக்கிய காரணம். அந்த ஊடகத்துறையின் துணையோடு 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா டிச.20 முதல் 29ஆம் தேதி வரை பெங்களூரில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடுயூட் ஆஃப் எஞ்சினியர்ஸ் வளாகத்தில் நடத்தப்படவிருக்கிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 27 அரங்குகள் அமைக்கப்படவிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் கன்னட, ஆங்கில நூல்களும் இடம்பெறும்.
டிச.20ஆம் தேதி காலை 11 மணிக்கு மூத்த் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்.வி.இராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் தொடக்கவிழாவில் இஸ்ரோ மேனாள் தலைவர் டாக்டர்.கே.சிவன் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை தொடக்கிவைக்க இருக்கிறார். தமிழக அரசின் அயலத்தமிழர் நலவாரியத்தலைவர் திரு.கார்த்திகேய சிவசேனாதிபதி, இந்தியப் பேனாநண்பர் பேரவை நிறுவனர் தலைவர் மா.கருண், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் திரு.வீராணம் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
டிச.21ஆம் தேதி காலை 10மணிக்கு ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, புதுமுகக்கல்லூரி, பட்டக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு நடத்தப்படும் தமிழ் மொழித்திறன்போட்டிகளை மேற்கு வங்க மேனாள் கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.கோ.பாலச்சந்திரன் தொடக்கிவைக்கிறார்.
டிச.21ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்படட் சிறந்த தமிழ்நூல் பரிசுப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்பாளர்களுக்கு கருநாடக அரசின் தொழில்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர்.எஸ்.செல்வக்குமார் பரிசுகளை வழங்குகிறார். தினந்தோறும் இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணன், கவிஞர் முத்துநிலவன், பேரா.முனை.கு.வணங்காமுடி, திரு.சு.குமணராசன், கவிஞர் இராகவேந்திரன், எழுத்தாளர் திரு.என்.சொக்கன், செல்வி புதுகை சிவநந்தினி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் டிச.24ஆம் தேதி கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில் கவியரங்கம், டிச.25ஆம் தேதி கவியருவி அப்துல்காதர் தலைமையில் பட்டிமன்றம் நடக்கவிருக்கிறது. டிச.28ஆம் தேதி பகல் 3 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை, இராணுவ விஞ்ஞானி டாக்டர்.வி.டில்லிபாபு, இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர்.வீரமுத்துவேல், இளம் விஞ்ஞானி டாக்டர்.ஆனந்த் மேகலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளும் வாசிப்பும் அறிவியலும்…விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர்களுக்காக நடத்தப்படுகிறது.
டிச.29ஆம் தேதி மாலை 5 மணிக்கு மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி டாக்டர்.எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடக்கும் நிறைவுவிழாவில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தலைவர் டாக்டர்.வி.இராம்பிரசாத் மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கும், தமிழர்களின் நல்வாழ்வுக்கும் தொண்டாற்றிய பன்முகத்திறன்வாய்ந்த சான்றோர் பெருமக்களுக்கு 3ஆவது ஆண்டாக கருநாடகத் தமிழ்ப்ம்பெருந்தகை விருது, கருநாடகத் தமிழ் ஆளுமை விருது, கருநாடக சீர்மிகு செந்தமிழ் பள்ளி விருது, கருநாடக சீர்மிகு செந்தமிழ்க் கல்லூரி விருது, கருநாடக சீர்மிகு தமிழ் அமைப்பு விருது ஆகியவற்றை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. பெங்களூரு, கோலார்தங்கவயல் மட்டுமல்லாமல், மைசூரு, பத்ராவதி, சிவமொக்கா பகுதிகளில் செயல்படும் தமிழ்ச்சான்றோர்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ் அமைப்புகளையும் கருநாடகத் தமிழ் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கருநாடகத்தில் 50 ஆண்டுகளுக்க்ஜ்ம் மேலாக தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழ் செயற்பாட்டாளர் திரு.சி.இராசன் அவர்களுக்கு கர்நாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படுகிறது. தமிழ்ச்சான்றோர்கள் 20 பேருக்கு கர்நாடகத் தமிழ் ஆளுமை விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. கருநாடகத்தில் அயராமல் தமிழ்ப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்ப்பள்ளிகள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகளுக்கு சீர்மிகு செந்தமிழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல்களுக்கான போட்டியில் வெற்றிபெறும் நூல்களுக்கு ரூ. 35 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 1.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், தமிழ் மரபுக்கலைகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. அதேபோல, தமிழ்மரபுவிளையாட்டுகள், தமிழ் மரபு தின்பண்டங்கள், தமிழ் மரபு சித்த மருத்துவமுகாம் திருவிழாவில் இடம்பெறுகிறது.
3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவையொட்டி கருநாடகத்தில் நீண்டகாலமாக வாழும் தமிழர்களின் மொழி, கலை, இலக்கியம், சமயம், பண்பாடு, தொழில், வாழ்வியல் சார்ந்த செய்திகள் அடங்கிய வரலாற்றுப் பெட்டகமாக சிறப்புமலர் ஆண்டுதோறும் வெளியிடப்படும். இந்த ஆண்டுக்கான சிறப்புமலர், கருநாடகத்தில் தமிழ் இதழியல் என்ற பொருண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியத்துவம்வாய்ந்த பல கட்டுரைகள் இடம்பெறுகிரது. 100க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலர், கருநாடகத் தமிழ் இதழாளர் நாள் கொண்டாடப்படும் 2025ஆம் ஆண்டு பிப்.7ஆம் தேதி நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.
3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவுக்கு பெங்களூரு, கோலார்தங்கவயல், மைசூரு உள்ளிட்ட கருநாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலரும் வருகை தரவிருக்கிறார்கள் என்றார்.
பேட்டியின் போது தமிழ் மொழித்திறன் போட்டிக்குழு பொறுப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி, சிறப்புமலர்க்குழு பொறுப்பாளர் பொறி.இரா.நித்யகல்யாணி, தமிழ் மரபு விளையாட்டுக்குழு பொறுப்பாளர் இம்மாக்குலெட் அந்தோணி, கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிக்குழு பொறுப்பாளர் திரு.அருள்கோவன், வரவேற்புக்குழு பொறுப்பாளர் திரு.என்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூடுதல் விவரங்களை https://tamilbookfestival.com என்ற இணையதளத்தில் பெறலாம்.
தொடர்புக்கு: 6363118988தமிழ்ப்புத்தகத்திருவிழா_2024 thamizh_putthaga_thiruvizha_2024