
பெங்களூரு: ஜூலை 6-
நீண்ட தாடி, முதிர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட 72 வயது சாயிபண்ணா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவிலேயே மிக நீண்ட காலம் — அதாவது தொடர்ந்து 37 ஆண்டுகள் — சிறைத்தண்டனை அனுபவித்த முதல் கைதி இவராவார்.
கூட்டுறவு சங்க எழுத்தராக இருந்த சாயிபண்ணாவின் வாழ்க்கையை ‘சந்தேகம்’ என்ற பேய் இரத்தமயமாக்கியது.
தன் முதல் மனைவிக்கு தவறான தொடர்பு இருப்பதாக சந்தேகித்து அவரைக் கொலை செய்தார். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.பரோலில் வெளியே வந்தபோது, இரண்டாவது மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டு அவரையும், தடுத்த தன் சொந்த மைனர் மகளையும் கொடூரமாக வெட்டிக்கொன்றார்.
கீழ் நீதிமன்றம் இவருக்கு விதித்த மரண தண்டனையை, உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. சிறையில் இவர் அனுபவித்த தனிமைச் சிறைவாசம் மற்றும் கருணை மனு தாமதம் ஆகியவை இவருக்குச் சாதகமாக அமைந்து இப்போது விடுதலையாகியுள்ளார்.
37 ஆண்டுகள் சிறையில் இருந்தபோதிலும் சாயிபண்ணாவின் மனதில் சிறிதும் வருத்தம் இல்லை. ஊடகங்களிடம் பேசிய அவர், “என் மனைவிகள் வழிதவறிச் சென்றதால் தான் கொன்றேன். மனைவிக்கு கற்பு தான் முக்கியம்” எனத் தன் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், சிறைக்குள் இவருடைய நடத்தை மிகவும் நன்றாக இருந்தது என சிறைத்துறை டிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.


















