3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: டிசம்பர் 15-
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முதலில் பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டிற்கு செல்கிறார்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பின்னர் அவர் டிசம்பர் 16ம் தேதி எத்தியோப்பியாவிற்கு செல்கிறார். இந்த பயணம் முடிந்த பிறகு, டிசம்பர் 17ம் தேதி ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்தியாவும் ஓமனும் பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு, வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே உறவை கொண்டுள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: அடுத்த மூன்று நாட்களில், ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
இந்த மூன்று நாடுகளும் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகள். இந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு பழங்கால நாகரிகத் தொடர்புகளும், வலுவான இருதரப்பு உறவுகளும் உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.