37வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி.. கிங் கோலி முன் காத்திருக்கும் சவால்கள்

மும்பை, நவ. 5- இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டின் அரசனாக விளங்கும் விராட் கோலி யாராலும் தொட முடியாது என்று நினைத்த சாதனைகளை அசால்டாக முறியடித்தார். குறிப்பாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்களை விராட் கோலி அசால்ட்டாக கடந்து தற்போது 51 சதம் அடித்திருக்கின்றார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் என அனைத்து போட்டிகளிலும் சாதனை படைத்த விராட் கோலி கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விராட் கோலி விளையாடி வரும் நிலையில், அவர் முன் காத்திருக்கும் சவால்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். உலக கிரிக்கெட்டில் முக்கால்வாசி சாதனைகளை முறியடித்த விராட் கோலிக்கு தனது திறமையை இன்னும் நிரூபிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
ஆனால் தனிப்பட்ட மன திருப்திக்காக விராட் கோலி இன்னும் கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்திருக்கிறார். கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையில் வெல்ல முடியாமல் தவித்த விராட் கோலிக்கு அதுவும் கிடைத்து விட்டது. இதனால் விராட் கோலி இனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இருக்கிறது. விராட் கோலி தனது 23 வது வயதில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றார். அதன் பிறகு மீண்டும் உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என அவர் கடுமையாக முயற்சி செய்தார். 2023 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து இந்தியா தோல்வியை தழுவியது. இந்த சூழலில் மீண்டும் ஒரு முறை உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கனவில் கோலி இருக்கின்றார். ஆனால் டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவது தான் தற்போது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அடிக்கடி நடைபெறும். ஆனால் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் ஒருநாள் போட்டியின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இரு ஒரு நாள் தொடருக்கும் இடையே பெரிய அளவு இடைவெளி இருப்பதால் விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி ஃபார்மில் இருப்பது மிகவும் கடினம். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் கோலி கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். முதல் இரண்டு போட்டிகளில் கோலி டக் அவுட் ஆன நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தார். தற்போது 2027 உலக கோப்பைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றது. அப்போது கோலிக்கு 38 வயது முடிந்து 39 வயது தொடங்கிவிடும். அதுவரை கோலியால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட முடியுமா என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கின்றது. முடியாததை முடித்துக் காட்டுவது தான் என்னுடைய பழக்கம் என்பதில் உறுதியாக இருக்கும் கோலி. அதை நோக்கி தான் தற்போது உழைத்து வருகிறார்.