
மும்பை: அக். 16-
மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5வது நாளாக டிராபிக் ஜாம் தொடர்கிறது. அங்குப் பல கிமீ தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அங்கு மிக மோசமான நிலை உருவாகியுள்ளது. பல நூறு மக்கள் சாலையிலேயே நகர முடியாமல் தவித்து வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் டிராபிக் பாதிப்பு என்பது முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. முன்பு ஓரிரு இடங்களில் மட்டுமே இருந்த டிராபிக் பிரச்சினை இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு டிராபிக் சிக்கல் ரொம்பவே மோசமான நிலையை அடைந்துள்ளது.
இதற்கிடையே மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை (NH-48) ஏற்பட்ட டிராபிக் ஜாம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. அங்குச் சாலையில் வாகனம் நகராமல் அப்படியே இருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சுமார் 70+ கிமீ தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் உதவியற்று தவித்து வருகிறார்கள்.. மேலும், அங்குச் சாலையில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் சிக்கியுள்ளது. 5வது நாளாக டிராபிக் நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் பலரும் விமானம் மற்றும் ரயில்களைப் பிடிக்க முடியாமல் விட்டுள்ளனர்.
தானேயில் உள்ள காயாமுக் காட்ஸ் பகுதியில், சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்லக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பையும் யாரும் மதிக்கவில்லை.. தடையை மீறிப் பல கனரக வாகனங்கள் அப்பாதையில் சென்றதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்போதும் அந்த சாலையில் சென்றால் பல மணி நேரம் மாட்டிக் கொள்ளும் நிலையே இருக்கிறது. அவசர வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கி நகர முடியாமல் திணறியுள்ளன. இது அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அந்த நேரம் குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை 48ல் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. தொடரும் சோகம் கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக NH-48 நெடுஞ்சாலையில் பயணிகள் இதேபோன்ற துயரங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். வெர்சோவா பாலத்தின் பழுதுபார்க்கும் பணிகள், புதிய பாலம் கட்டும் பணிகள் எனக் கடந்த 2, 3 ஆண்டுகளாகவே தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதுவும் மழைக்காலத்தில் நிலைமை மேலும் மோசமானது. மழைநீர் காலங்களில் சாலைகளில் இருக்கும் பள்ளங்களை மழை நீர் நிரப்பிவிடும். இதனால் எங்குப் பள்ளம் இருக்கிறது என்றே தெரியாமல் வண்டிகள் அதில் சென்று சிக்கிக் கொள்ளும். மழை குறைந்த பிறகு சாலைகள் மேலும் மோசமாக சேதமடைந்துவிடுகின்றன. இந்தச் சாலையை சிமெண்ட் கான்கிரீட் சாலையாக மாற்ற ரூ. 600 கோடி செலவிடப்பட்ட பின்னரும், போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்வதே மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.















