5 பேர் மீது கண்ணூர் நகர போலீசார் வழக்கு பதிவு

திருவனந்தபுரம், பிப். 26- கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த உஷா ஜோசப் என்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மாணவர் சங்கத்தினர் மற்றும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கண்ணூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் திரும்புவதற்காக கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். கண்ணூர் ரயில் நிலையத்துக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் வர உள்ளதை அறிந்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கண்ணூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைச்சர் வீணா ஜார்ஜை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சமயத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய கழுத்தில் கடுமையான வலி இருப்பதாக வீணா ஜார்ஜ் கூறினார். இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.