50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல் தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்ரீநகர்: ஜூலை 12 –
ஜம்மு பிராந்தியத்தில் 50 பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ட்ரோன் மூலம் கண்காணிப்பு, சந்தேக நபர்களிடம் விசாரணை என பல அடுக்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந் நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடரின் தெற்கு பகுதியில் கிட்டத்தட்ட 40 முதல் 50 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பல்வேறு குழுக்களாக இவர்கள் பிரிந்து தங்கி உள்ளதாகவும் தெரிய வர, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து இருக்கின்றனர்.
பூஞ்ச், கிஷ்துவார், ரஜௌரி, உதம்பூர், தோடா என பல பகுதிகளில் தீவிர சோதனையில் பாதுகாப்பு படையினர் இறங்கி உள்ளனர். ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற கூடுதல் தகவலின் எதிரொலியாக, அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் பற்றிய விவரங்களையும் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இரவுநேர ரோந்து, ட்ரோன் மூலம் கண்காணிப்பு என உச்சக்கட்ட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர். அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது; வழக்கமாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பயன்படுத்தப்படும் வழிகள் அனைத்தும் ஏற்கனவே அடையாளம் கண்டு அடைக்கப்பட்டு விட்டன. நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.