500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? என்ன சொல்கிறது மத்திய அரசு?

டெல்லி: ஜனவரி 3-
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 8அம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திடீரென 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. திடீரென வெளியிட்ட இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து ரிசர்வ் வங்கி படிப்படியாக 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கியது. 2023 ஆம் ஆண்டு மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை முழுவதுமாக புழக்கத்திலிருந்து நீக்குவதாகவும் பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கக்கூடிய 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் இருக்கக்கூடிய வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இந்த சூழலில் 2000 ரூபாய் நோட்டை போலவே கூடிய விரைவில் 500 ரூபாய் நோட்டுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்போகிறது , மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுகள். ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த நோட்டுகளே அதிகம் கிடைக்கின்றன. வியாபாரிகள், வணிகர்கள் என ஏராளமானவர்கள் அதிகமாக புழங்கும் நோட்டாகவும் 500 ரூபாய் நோட்டுகளே உள்ளன.
இத்தகைய சூழலில் மார்ச் மாதம் முதல் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகள் வராது புழக்கத்தில் இருந்தே நீக்கப்படுகிறது என்ற தகவல் பலரையும் அச்சமடைய வைத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பு அமைப்பு இது தொடர்பாக விளக்கம் தந்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் மார்ச் மாதத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் வராது , அதன் பிறகு படிப்படியாக 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகிறது என்று ஒரு தகவல் பரவி வருகிறது . இது போலியானது என தெரிவித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி இதுபோல எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என குறிப்பிட்டு இருக்கிறது.