7 லட்சம் ஆமைகள் பாதுகாப்பு

புவனேஸ்வர்: மே 20-
ஒடிசா கடல் பகுதியில் முட்டையிட ஒதுங்கிய 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல் படை பத்திரமாக பாதுகாத்து உள்ளது.
இந்திய பெருங்கடல், பசிபிக், அட்லான்டிக் கடல் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழ்கின்றன. இவை 2 அடி நீளம், 50 கிலோ எடை கொண்டவை ஆகும். கடலில் 200 மீட்டர் ஆழத்தில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழும். ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்த ஆமைகள் முட்டையிடுவதற்காக கரைக்கு வரும். இந்தியாவில் ஒடிசா முதல் சென்னை வரையிலான கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கரை ஒதுங்குவது வழக்கம்.
இந்த நேரத்தில் விசைப் படகுகள் மோதியோ, வலைகளில் சிக்கியோ ஏராளமான ஆமைகள் உயிரிழக்கின்றன. கடற்கரை பகுதிகளிலும் இவை வேட்டையாடப்படுகின்றன. இதை தடுக்க இந்திய கடலோர காவல் படை சார்பில் கடந்த 1980-களில் ‘ஆபரேஷன் ஆலிவியா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி முட்டையிட கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
நடப்பு 2025-ம் ஆண்டில் ஒடிசாவின் ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தில் சாதனை அளவாக 7 லட்சத்துக்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட கரை ஒதுங்கி உள்ளன. அவை கூடு கட்டி முட்டையிட தேவையான வசதிகளை கடலோர காவல் படை வீரர்கள் செய்தனர். கடந்த சில மாதங்களாக அவர்கள் மேற்கொண்ட தீவிர ரோந்து, வான்வழி கண்காணிப்பு மூலம் 7 லட்சம் ஆமைகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டன.
இந்திய கடலோர காவல்படை சார்பில் இதுவரை 5,387-க்கும் அதிகமான ரோந்து பணி, 1,768 வான்வழி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆமைகளை பாதுகாக்க ஒடிசா கடல் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டது. இதுதொடர்பாக 366 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.