74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா

ஒட்டாவா: நவ. 4 –
கனடாவில் படிக்க விண்ணப்பித்த 74 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மையான விருப்பத் தேர்வாக கனடா இருக்கும். அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்களாக இருப்பார்கள். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 1.88 லட்சம் மாணவர்கள் அந்நாட்டிற்கு படிக்க சென்றனர். இது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகம் ஆகும். இதற்கு, உலகத் தரமான கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.
ஆனால், தற்போது அந்நாட்டில் வீடுகள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருகிறது.இதனையடுத்து விசா விதிமுறைகளை அந்நாடு கடுமையாக்கி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
தற்போது கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக அரசு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், கல்வி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2023 இல் 20,900 ஆக இருந்து ஆகஸ்ட் 2025 இல் 4,515 ஆகக் குறைந்துள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கடந்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, ”கனடா குடியேற்ற விதிமுறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகமான இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.