
சென்னை: பிப்ரவரி 24-
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் 74.07 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற உள்ள சட்டப்பேரவைதேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை விண்ணப்பித்தால்கூட, தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2025 அக்.27-ம் தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு கடந்த டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5.44 கோடி பேர் மட்டுமே இருந்தனர்.உயிரிழந்தவர்கள் 26.96 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66.45 லட்சம் பேர், இரட்டைப் பதிவு வாக்காளர்கள் 3.98 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஜன.30-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 27.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 4.23 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் தமிழகம் முழுவதும் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.















