திருச்செந்துாரில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்புபக்தர்கள் அதிர்ச்சி

துாத்துக்குடி:ஜன.2-
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் அதிக அளவிலான கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட இயலாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களை பாதுகாப்பாக புனித நீராடும்படி கோவில் கடற்கரை பணியாளர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவில் கடற்கரை கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் கருப்பு நிறத்துடன் காணப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததால் ஒருவாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடற்கரை பகுதியில் கடல் பெருக்கு ஏற்பட்டு அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறுவதால் தண்ணீர் குழப்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படுவதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.