சென்னை: ஏப்ரல் 19- அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் இணைந்து பணியாற்ற மாட்டோம் என எஸ்டிபிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அண்மையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. சென்னை வந்த அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்திருந்த நிலையில் மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. பாஜக உடனான கூட்டணி முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தி உள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 1 இடத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது எஸ்டிபிஐ. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், “தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது முழக்கம் எங்கே போனது? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்கும் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.