ராமர் பாலம்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு

புதுடில்லி :மே.27-
இந்தியா – இலங்கை இடையே உள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தரப்பில், 2019ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய கலாசார அமைச்சகத்தை சுப்பிரமணியசாமி அணுகலாம் என்றும், ஒரு வேளை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி, புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறியுள்ளதாவது: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, பலமுறை மத்திய அரசை ராமர் பாலம் தொடர்பான விவகாரத்தில் அணுகினேன். ஆனால், எந்த பதிலையும் மத்திய அரசு வழங்காததால், மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளேன்.
எனவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.