ஈரானின் உதவிக்கு களமிறங்கும் துருக்கி பாகிஸ்தான் சவுதி ராணுவம்?

டெஹ்ரான், ஜூன் 17- இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.
இந்த மோதல் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருநாடுகள் இடையே போர் உருவாகிவிட்டதா? என்ற அளவுக்கு தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலை சமாளிக்க துருக்கி, பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்பட பிற இஸ்லாமிய நாடுகளின் ராணுவம் ஒன்றாக இணைய வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது. ஏற்கனவே இந்த நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த நிலையில் ஈரானுக்கு ஆதரவாக ராணுவத்தை களமிறக்குகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே உள்ள நீண்டகால பகை தற்போது போராக மாறும் அபாயத்தை எட்டி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை தடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவும் முடிவு செய்தது. அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதுதொடர்பாக இருதரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. ஈரான் தலைநகர் டெல்அவிவ்வில் ஏவுகணைகளை மூலம் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.