
சென்னை: ஜூன் 26 ‘தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில், ‘ரேபிஸ்’ என்ற வெறிநாய்க்கடி நோய் பாதிப்பு ஏற்பட்டு, 18 பேர் இறந்துள்ளனர். நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவது போல், மற்ற விலங்குகள் கடித்தாலும், உரிய சிகிச்சை பெற வேண்டும்’ என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தடுப்பூசி
தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பொதுவாக ‘ரேபிஸ்’ தொற்றில் இருந்து, செல்லப்பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு, ஒரே வழியாக தடுப்பூசி உள்ளது.
நாய்களை பொறுத்தவரை, பிறந்த முதல் ஆண்டில் இருமுறை, ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.
ஆனால், சில தெருநாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதர்களை நாய்கள் கடிக்கும்போது, ‘ரேபிஸ்’ தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டில் மட்டும், நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில், 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் ஆறு மாதங்களில், 2.80 லட்சம் பேர் வரை, நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் மட்டும், 20,000 பேர் வரை, நாய்க்கடி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திருவண்ணாமலையில், 3, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா இருவர் என, மாநிலம் முழுதும் 18 பேர் ரேபிஸ் நோயால் இறந்து உள்ளனர்.