நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை

பாலக்காடு: ஜூலை 8-
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த, 38 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்து.
அப்போது அவர் பேசியதாவது:
நிபா வைரஸ் பாதித்த பெண், தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நோய் பாதித்தவருடன், 173 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். அதில் முதன்மை தொடர்பு பட்டியலில், 100 பேரும், இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலில், 73 பேரும் உள்ளனர்.
மேலும், காய்ச்சல் உள்ள நான்கு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நோய் உறுதி செய்த நபரின் வீட்டை சுற்றி, 3 கி.மீ., சுற்றளவில், வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ், வவ்வால்களின் எச்சத்தை பரிசோதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.