ஆகஸ்ட், செப்டம்பரில் பெய்ய போகும் மிக கனமழை

சென்னை: ஆகஸ்ட் 1-
தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் எப்போதும் பெய்யும் மழை அளவை விட இந்த ஆண்டில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி ஏற்பட்டுள்ளதால் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, தென்மேற்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், இரண்டாம் பாதியான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக அளவு மழைப் பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை பெய்யும் முதல் பாதி மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்கனவே நாட்டில் 474.3 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையைவிட கிட்டத்தட்ட 6 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில், ஆகஸ்ட், செப்டம்பரிலும் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களைத் தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழையும், அதிக அளவில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.