கன்னியாஸ்திரிகள் கைது விஷயத்தில்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ராய்பூர்:ஆகஸ்ட் 1- கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். மதமாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக காவல்துறை கூறியிருந்த நிலையில், என்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாக அப்பெண் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.இது மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், அரசியல் ரீதியாகவும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகளான ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ், மற்றும் சுஷ்மான் மண்டவி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மத சுதந்திர சட்டம் மற்றும் பாலியல் வர்த்தக தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் நாராயண்பூர் பகுதியிலிருந்து மூன்று பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, அவர்களை கடத்த முயன்றதாக பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பஜ்ரங் தள் சத்தீஸ்கர் ஒருங்கிணைப்பாளர் ரிஷி மிஸ்ரா கூறுகையில், “ஒரு ஆட்டோ ஓட்டுநர், கன்னியாஸ்திரிகளும் பெண்களும் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டு, அவர்கள் கடத்தப்படுவதாக சந்தேகப்பட்டார். அதன் பிறகு எங்கள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ரயில்வே காவல்துறைக்கு புகார் அளித்தனர்” என்று தெரிவித்தார். ஜோதி ஷர்மா பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், துர்க் வஹினி மாத்ருசக்தியைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார். இந்துத்துவா ஜோதி ஷர்மா தன்னை ஒரு ‘இந்துத்துவவாதி’ என்று விவரித்துள்ளார். “எங்கே இந்துத்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அங்கே நான் வருவேன்” என்று அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் காவல்துறை டிஜிபி அருண் குமார் கௌதம், நாராயண்பூர் பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, “விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது” என்று கூறியுள்ளார். கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் இருந்து 21 வயதான பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணை மதம் மாற்றி கடத்தி செல்வதாக இந்துத்துவா அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் குறிப்பிடும் அப்பெண், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “தயவுசெய்து கைது செய்யப்பட்ட மூன்று கன்னியாஸ்திரிகளையும் விடுவியுங்கள். அவர்கள் அப்பாவி” என்று கூறியுள்ளார்.
மேலும், தன்னார்வத்தின் பேரிலும், பெற்றோரின் சம்மதத்துடனும் கன்னியாஸ்திரிகளுடன் பயணிக்க வெள்ளிக்கிழமை துர்க் ரயில் நிலையத்திற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார். ஷர்மா தன்னைத் தாக்கியதாகவும், துர்க்கில் உள்ள அரசு ரயில்வே காவல்துறை (GRP) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாறாக, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.