தர்மஸ்தலா – தோண்டும் பணி தீவிரம்

பெங்களூரு:ஆகஸ்ட் 1- கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும், ஆறாவது இடத்தில் தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு சிக்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் வேலை செய்த முன்னாள் துாய்மை பணியாளர் போலீசில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரிக்கும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, நேத்ராவதி ஆற்றங்கரையோரம், புகார்தாரர் சுட்டிக்காட்டிய 13 இடங்களை அடையாளமிட்டது.கடந்த 29ம் தேதி ஒரு இடத்திலும், நேற்று முன்தினம், நான்கு இடங்களிலும், 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், புகார்தாரரால் அடையாளம் காட்டப்பட்ட ஆறாவது இடத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு தோண்டும் பணி துவங்கியது. 6 அடிக்கு தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு, உள்ளாடையில் இருக்கும், ‘எலாஸ்டிக்’ ஆகியவை கிடைத்தன.
இதையடுத்து வழக்கு விசாரணை சூடுபிடிக்க துவங்கி உள்ளது.