சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: காரணம் இணை நோய்

சென்னை: ஆகஸ்ட் 4
தமிழகத்தில், சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த, 2021 – 22ம் ஆண்டில், 47.4 சதவீதமாக இருந்த, சிசேரியன் பிரசவங்கள், தற்போது, 51.2 சதவீதமாக அதிகரித்துள்ளன. பெண்களின் எடை அதிகரிப்பு மட்டுமல்ல, இணை நோய்களும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழக அரசு தரப்பில், பிரசவ நேரங்களில் தாய், சேய் இறப்பை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்ப்பிணியரின் அனைத்து செயல்பாடுகளும் பிக்மி பதிவுகள் வழியாக கண்காணிக்கப்படுகின்றன. மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை புள்ளி விபரங்களின் படி, அரசு, தனியார் மருத்துவமனைகளில், 2021-22ல், 9 லட்சத்து, 11,028 பிரசவங்கள் நடந்துள்ளன.
அதில், 4 லட்சத்து, 32,435 பிரசவங்கள் சிசேரியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 – 25 மார்ச் வரை, 8 லட்சத்து, 1,611 பிரசவங்கள் மொத்தமாக நடந்ததில், 4 லட்சத்து, 10,765 பிரசவங்கள் சிசேரியனாக பதிவாகி உள்ளன.
கருவில் உள்ள குழந்தையின் சீரற்ற இதயத்துடிப்பு, கருவிலுள்ள குழந்தை எடை அதிகரிப்பு, கர்ப்பிணியர் உடல் எடை அதிகரிப்பு. சர்க்கரை, தைராய்டு, ரத்த சோகை, ரத்த அழுத்தம், பிற இணை நோய்களால் கர்ப்பிணியர் பாதிக்கப்படுவது போன்றவையே, சிசேரியன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.