மும்பை: ஆகஸ்ட் 4
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வரைபடத்தில் வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2022-இல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர், இந்தியா தனது பாரம்பரிய மேற்கு ஆசிய எண்ணெய் வழங்கல் நாடுகளிடம் இருந்து மாறி, ரஷ்யாவை தனது மிகப்பெரிய எண்ணெய் வழங்குநராக மாற்றியுள்ளது.
எண்ணெய் இறக்குமதி நாடுகளின் தற்போதைய நிலை: ரஷ்யா: 17-18 லட்சம் பேரல் (மொத்த இறக்குமதியின் 35-40%) ஈராக்: 10 லட்சம் பேரல் (19-20% பங்கு) சவுதி அரேபியா: 8-9.5 லட்சம் பேரல் (15-17% பங்கு) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 4.9-5.3 லட்சம் பேரல் (10-11% பங்கு) அமெரிக்கா: 2-3 லட்சம் பேரல் (5-6% பங்கு) ஆப்பிரிக்க நாடுகள்: நைஜீரியா, அங்கோலா உட்பட சேர்த்து 6-7% பங்கு
ரஷ்ய எண்ணெய் அதிகரிப்புக்கான முக்கிய காரணங்கள் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யா உலக சந்தை விலையை விட கணிசமான தள்ளுபடியில் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கியது. இதனால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்து, உள்நாட்டு பணவீக்கம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் இந்தியாவுக்கு நேரடியாக பொருந்தாது. சர்வதேச விதிமுறைகளுக்குள் இருந்து கொண்டு இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் எந்த சட்ட பிரச்சனையும் இல்லை. “எந்த நாட்டிலிருந்து மிகக் குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அந்த நாட்டிலிருந்து வாங்குவோம்” என்பது இந்திய அரசின் தெளிவான கொள்கை. நாட்டின் பொருளாதார நலன், சர்வதேச சூழ்நிலை, ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடைமுறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் என்ற நிலையில், இந்தியா தனது ஆற்றல் தேவைகளை பொருளாதார ரீதியாக சாதகமான முறையில் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குதல், தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் மீண்டும் ஏற்றுமதி, மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார கொள்கை மற்றும் வெளியுறவு உறவுகளை அதிகமாக பாதித்து வருகின்றன.

















