
ஹைதராபாத்: ஆக. 8-
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று மாலை ஆரம்பித்த மழை இரவு வரை விடாமல் கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் நீர் தேங்கியது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே நீர் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இப்போது மழைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் இப்போது பல காரணங்களால் வானிலை நிகழ்வுகள் மோசமாகிவிட்டது. அதாவது குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டி தீர்ந்து வெள்ளம் ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட உத்தரகண்ட்டில் அப்படி தான் மோசமான வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையே தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வாகனங்களும் ஆங்காங்கே நின்றன. இந்த கனமழையால் அங்கு நகரம் முழுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி, ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் காச்சிபௌலி என்ற பகுதியில் 126.5 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டது போல மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு 100 மிமீ-க்கும் அதிகமான கனமழை கொட்டியது. இது ஹைதராபாத் வடிகால் அமைப்புகளைத் திணறடித்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. மாலை ஆரம்பித்த மழை இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது.
மாணிக்கொண்டா என்ற பகுதியில் நிறுத்தப்பட்ட கார் மீது சுவர் இடிந்து விழுந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பேஸ்மெண்டுகள் மற்றும் பார்கிங்கில் தண்ணீர் புகுந்தது. இதனால் வாகனங்களும் நீரில் மூழ்கின. ஆங்காங்கே சில பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள். மேலும், கனமழையால் பல சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், போக்குவரத்து ஸ்தம்பித்தது. சரியாக அலுவலகத்தில் இருந்து கிளம்பும் நேரத்தில் மழை ஆரம்பித்ததால் பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிரமப்பட்டன. பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் திருப்பிவிடப்பட்டது. இதனால் ஐடி பணியாளர்கள் வீடு திரும்பவே இரவு வரை ஆகிவிட்டது. எச்சரிக்கை பல சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், இது குறித்து நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீர் தேங்கிய சாலைகள் மற்றும் நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அவசரக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டது. பயோடைவர்சிட்டி ஜங்ஷன், மைண்ட் ஸ்பேஸ், சைபர் கேட்வே, டல்லாஸ் சாலை என ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் நீர் அதிகம் தேங்கியது. அங்கு முழங்கால் அளவு தண்ணீரில் வாகனங்கள் சென்றதால் சாலை போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், கனமழையால் அங்கு நீர்த்தேக்கங்களும் கூட நிரம்பின. ஹிமாயத்சாகர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்ததால், இரவு 10 மணிக்கு ஒரு மதகு திறக்கப்பட்டது.