டிரம்ப் பேச்சை கேட்டால் உலகம் முழுவதும் விலைவாசி தாறுமாறாக அதிகரிக்கும்

லண்டன்: ஆக.8-
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போல், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடியவர். உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்கிறார் அவர். அவர் கூறுவது போல் இந்தியா செய்தால் என்ன ஆகும்? இந்தியா, உலகின் பிற நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும்.
இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் 64 டாலர் என்ற அளவில் கச்சா எண்ணெய் விலை இருக்கிறது. ரஷ்யவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா முற்றிலும் நிறுத்தினால், சர்வதேச சந்தையில் பீப்பாய் 120 டாலராக விலை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒட்டு மொத்த உலக நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் பட்சத்தில், சர்வதேச சந்தையில் பீப்பாய் 200 டாலராகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் உலகம் முழுவதும் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து விடும்.
இதன் மூலம், அமெரிக்க மக்கள் முதல் சர்வதேச அரசியலுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஏழை நாடுகளை சேர்ந்தவர் வரை எல்லோரும் பாதிக்கப்படுவர் என்பதுதான் உண்மை நிலவரம்.நடந்தது என்ன?
ரஷ்யா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு. இன்று வரை அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணையை வாங்க, ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதுவும் தடை விதிக்கவில்லை.
சர்வதேச விலையைக் காட்டிலும் ஐந்து சதவீதம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
அந்த விதியை பின்பற்றி இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னதாக, ரஷ்யாவிடம் இந்தியா பெரிய அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவில்லை.