டெல்லி:ஆகஸ்ட் 10-
இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது .அண்மையில் தான் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த வகையில் தற்போது மற்றொரு நாட்டுடன் இந்தியா விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஓமன் உடன் பேச்சுவார்த்தை:இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு இருந்து வருகிறது. இந்த நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதனை அடுத்து விரைவில் ஓமன் மற்றும் இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை அரபிக் மொழியில் மொழிபெயர்த்து ஓமன் நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டியது மட்டுமே பாக்கி என்றும் தெரிவித்திருக்கிறது. இருநாட்டு அமைச்சரவைகளும் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்த உடன் இருநாட்டு தலைவர்களும் இதில் கையெழுத்து விடுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது.இரண்டு மாதங்களுக்குள் இது நடந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
விரைவில் கையெழுத்து: வளைகுடா கூட்டமைப்பில் இருக்க கூடியா நாடுகளிலேயே இந்தியா அதிகளவு ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு ஓமன் ஆகும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஓமன் மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும். ஏற்கனவே இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்தோடு 2022 ஆம் ஆண்டிலேயே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்துட்டு செயல்படுத்தி வருகிறது .















