ஹைதராபாத், ஆகஸ்ட் 20 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணி தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். திமுக தரப்பில் திருச்சி சிவா, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. அதேபோல, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், திட்ட கமிஷன் முன்னாள் தலைவர் பால்சந்திர முங்கேசர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும், அவர் அரசியல் கட்சிகளை சாராதவராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.இந்நிலையில், இண்டியா கூட்டணியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏகமனதாக அவரை தேர்வு செய்துள்ளன.














