பதுடெல்லி, ஆகஸ்ட் 20- ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்கிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதற்கிடையே காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்குத் தீவிரவாதிகளை ஒழிக்கவும், எல்லை தாண்டி நடக்கும் பயங்கரவாதத்தை நிறுத்தவும் மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தப் பிரிவுகள் தான் ஜம்மு-காஷ்மீருக்கு 1949 முதல் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்ததோடு, தனி அரசியலமைப்பின் மூலம் அதன் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்களை வழங்கியிருந்தன. இந்தச் சட்டத்தை மத்திய அரசு நீக்கியது. மாநிலத்தின் தனி அரசியலமைப்பை நீக்கும் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அமித் ஷா அறிவித்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீர் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.














