
வாஷிங்டன்: ஆகஸ்ட் 22-அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இருக்கும் 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை ஆய்வு செய்கிறது. அவர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை நாடுகடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த 7 மாதங்களாக அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக மட்டுமில்லாமல் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கிறார். சிறு விதிமீறல்களுக்கும் நாடுகடத்த உத்தரவிடப்படுகிறது. 5.5 கோடி விசா சரிபார்ப்பு இதற்கிடையே அமெரிக்காவில் செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் 5.5 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினரின் ஆவணங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியேற்ற விதிகளை மீறியதற்காக விசாக்களை ரத்து செய்யவும் அல்லது அவர்களை நாடுகடத்தவும் இந்த ஆய்வு நடப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது. அதாவது அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் விசா வைத்திருக்கத் தகுதியானவர்கள் என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளது. அவர்கள் அமெரிக்கச் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டால், விசா ரத்து செய்து, நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் சொல்வது என்ன அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் கூறுகையில், “விசா காலாவதி ஆன பிறகும் அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்கிறோம். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவது, மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். போலீஸ் டேட்டா அல்லது குடியேற்றப் பதிவுகள் அல்லது என அனைத்துத் தகவல்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள் முதல் முறைகேடான விசாக்களை ரத்து செய்துள்ளோம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகமான விசாக்களை ரத்து செய்துள்ளோம். இதில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு மாணவர் விசாக்கள் ஆகும்” என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.