முக்கியமான 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு

புதுடில்லி, ஆகஸ்ட் 28- அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாற்று வழிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. திருப்பூர் உள்ளிட்ட நகரங்களின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, 40 நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார். அது கடந்த 7 ம் தேதி அமலுக்கு வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலால், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. தடையை மீறி, ரஷ்யாவிடம் இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றம்சாட்டி, மேலும் 25 சதவீத வரி விதித்தார் டிரம்ப். இதனால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி 50 சதவீதமாக உயர்ந்தது. பிரேசிலுடன் சேர்த்து, அமெரிக்காவின் அதிகபட்ச வரி விதிப்புக்கு உள்ளானது இந்தியா. டிரம்ப் விதித்த 50 சதவீத வரி, நேற்று அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளித்திருந்த ஆர்டர்களின் பேரில் தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு நிறுவனங்கள் வலியுறுத்தின. சில நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்தன. இதனால், திருப்பூர் உள்ளிட்ட ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கும் நிலையால், ஆலைகள், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.