வைஷ்ணவி கோவில் சென்ற பக்தர்கள் 41 பேர் பலி!

ஜம்மு, ஆகஸ்ட் 28- ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு – காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் பெய்த கனமழையால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. ஜம்முவில் மட்டும் ஒரே நாளில் 38 செ.மீ மழை பதிவானது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கனமழை வெள்ளத்தில் சாலைகள் மற்றும் முக்கிய பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட பகுதி களில்தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கத்ராவிலிருந்து வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்லும் வழியில், அர்த்குவாரியில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. வைஷ்ணவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பலர் இதில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிஷ்த்வார் மாவட்டத்தின் மார்கி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் முக்கிய பாலம் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு மற்றும் கத்ரா ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து செல்லும் 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ம்மு காஷ்மீரில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.