ராணுவத்தின் அளப்பரிய பணி

ஜம்மு, ஆகஸ்ட் 29- – காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களில் பருவமழை பாதிப்புகளால் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் சேதமடைந்துள்ள நிலையில், மக்களை காப்பாற்ற இந்திய ராணுவமும் களமிறங்கி ஆபத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டிருப்பது பெரும் பாராட்டுக்குரிய செயலாக அமைந்துள்ளது. புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற ஆபத்து காலங்களில் பொதுமக்களை மீட்கவும், உதவவும் மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருகின்றன.அவர்களுடன் சமீபகாலமாக இந்திய ராணுவமும் மீட்பு பணிகளில் ஈடுபடுவது நாட்டு மக்களை பெருமையடையச் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள லாசியான் பகுதியில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணிக்கு உதவ ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ராணுவத்தின் 3 சீட்டா ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 5 எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர்கள், ஒரு சினூக் ஹெலிகாப்டர் இணைந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன் நிவாரணப் பொருட்களும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.ஜம்மு மற்றும் பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது சிக்கிக் கொண்ட 12 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 22 மத்திய ரிசர்வ் படை வீரர்களையும் ராணுவம் மீட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட 600-க்கும் மேற்பட்டோரை இந்திய ராணுவம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்திருப்பது சாதாரண விஷயமல்ல. ஜவுரியான் பகுதியில் மோசமான வானிலையிலும் 10 மணி நேரத்தில் 17 முறை ஹெலிகாப்டர் பயணம் செய்து மீட்பு பணிகளைச் செய்துள்ளது.குறிப்பாக, பஞ்சாபில் இடிந்து விழுந்து கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தின் மேல் பகுதி மீது ராணுவ ஹெலிகாப்டர் லாவகமாக அங்கு சிக்கியிருந்தவர்களை மீட்ட காணொலி காட்சி உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளதுடன் நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பகிரப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது. இதுபோன்ற பணிகள், ஆபத்தான சூழ்நிலைகளைக் கூட திறமையாக கையாண்டு சாதிக்கும் வல்லமை இந்திய ராணுவத்திற்கு உண்டு என்பதை நிரூபித்துள்ளது.எதிரி நாடுகளுடன் சண்டையிட்டு நாட்டைக் காப்பது ராணுவத்தின் பிரதான பணியாக இருந்தாலும், இதுபோன்று உள்நாட்டில் இயற்கை பேரிடர்களால் மக்கள் துன்புறும்போது, ராணுவத்தின் சக்தி பயன்படுத்தப்படுவது அதன் கடமையைத் தாண்டி, கூடுதலாக பணிபுரிந்து சேவைபுரிவதில் ராணுவம் சளைத்ததல்ல என்பதை காண்பிக்கும் விதமாக அமைந்து வருகிறது.

‘‘நெருக்கடியான நேரங்களில் மக்களை பாதுகாக்க அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க உறுதி எடுத்துள்ளோம்’’ என்று ராணுவம் அறிவித்துள்ளது கைமாறு கருதாத தன்னலமற்ற சேவைக்கு எடுத்துக்காட்டாகும். தங்கள் கடமைக்கு எல்லை வகுத்து அதோடு நின்றுவிடாமல் அதைத்தாண்டிச் சென்று மக்களுக்கு உழைக்க தயாராக உள்ளஇந்திய ராணுவத்துக்கு ‘சல்யூட்’ அடித்து நன்றி செலுத்துவோம்.