
பாட்னா, ஆகஸ்ட் 29- பீஹாரில், துக்கம் விசாரிக்க வந்த அமைச்சரின் கான்வாயில் வந்த கார்களை, 1 கிலோ மீட்டர் துாரம் விரட்டி சென்று கிராம மக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மாலவன் கிராமத்தில், கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகினர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரிப்பதற்காக, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஷரவண் குமார், அந்த கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச் சருடன் காரில் சென்றார். அங்கு சென்றதும் அமைச்சரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். ‘சம்பவம் நடந்து இவ்வளவு நாளான பின் ஏன் வந்தீர்கள்? விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காதது ஏன்?’ என, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். மேலும் அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அவர்கள் விரட்டி தாக்க துவங்கினர். இதனால் பீதிஅடைந்த அமைச்சர் உள்ளிட்டோர் கார்களில் தப்பி சென்றனர். அமைச்சருடன் சென்ற கார்களை கிராம மக்கள் 1 கி.மீ., விரட்டி சென்று தாக்கினர். அதிர்ஷ்டவசமாக இதில் அமைச்சர் காயமின்றி தப்பினார்.அமைச்சரின் பாதுகாவலர் காயம் அடைந்தார். அவர் ஹில்சா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்.