
கொழும்பு:ஆகஸ்ட் 29- ‘கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது. தமிழகத்தில் தேர்தல் நேரங்களில், கச்சத்தீவு பற்றி பேசுவதை, அரசியல் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்,’ என, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வருகிறார். இதற்காக, கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை கடந்த 21ல், மதுரையில் நடத்தினார்.
அதில் பேசிய விஜய், ‘தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க, பிரதமர் மோடியும், மத்திய அரசும் தவறி விட்டன. தமிழக மீனவர்களின் நிரந்தர பாதுகாப்புக்கு, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு’ என கூறினார்.
இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜயின் இந்த பேச்சுக்கு, பதிலளிக்கும் விதமாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியதாவது: கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. இந்த நிலை, ஒருபோதும் மாறாது; எதிர்காலத்திலும், இலங்கைக்கு சொந்தமானதாகவே கச்சத்தீவு இருக்கும்.தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், தேர்தல் நடைபெறும் நேரங்களில் எல்லாம், ஓட்டுகளை பெறுவதற்காக, அங்குள்ள அரசியல் கட்சியினர், இதுபோன்று பேசுவதும், அறிக்கை விடுவதும் வழக்கம். இது முதல் முறை அல்ல; கடந்த காலங்களில் கூட, தேர்தல் பிரசார மேடைகளில் இதுபோன்று பலர் பேசி உள்ளனர். எனவே, விஜயின் பேச்சை பொருட்படுத்த தேவையில்லை.இந்த விஷயத்தில், துாதரக ரீதியிலான கருத்துகள் மட்டுமே முக்கியம். இந்திய அரசிடம் இருந்தோ, துாதர்களிடம் இருந்தோ, கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றிய எந்த கருத்தும் வரவில்லை.மேலும், இந்திய தரப்பில் இருந்து, துாதரக ரீதியாக, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.