
வாஷிங்டன், ஆகஸ்ட் 30- அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் விளாசியுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என டிரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து அது அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் நலியும் அபாயம் இருக்கிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளே டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செய்தார். அதிலும் அவர் தற்போது வரி போரில் இறங்கியுள்ளார். அதாவது நாடுகள் மீது வரியை திணிப்பதை வரி போர், வரி யுத்தம் என்றழைப்பார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க நீதிமன்றம் கூறுகையில், உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளது சட்டவிரோதமானது. வணிகத்தின் இதயத்தில் அடிப்பது போன்றதாகும் என தீர்ப்பளித்தது. எனினும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அக்டோபர் 14 வரை வரிவிதிப்புக்கு கோர்ட் தடைவிதிக்கவில்லை. இதுகுறித்து டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து வரிவிதிப்புகளும் அமலில்தான் இருக்கின்றன. இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிவிதிப்புகளை நீக்க வேண்டும் என தவறாக கூறியுள்ளது. ஆனால் இறுதியில் அமெரிக்கா வெல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும். வரிவிதிப்புகளை நீக்கினால் அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படும். அமெரிக்கா இனி மிகப் பெரிய வர்த்தக பற்றாக்குறைகள், நியாயமற்ற வரிவிதிப்புகள், பிற நாடுகளால் விதிக்கப்படும் வர்த்தக தடைகள் உள்ளிட்டவை நமது உற்பத்தியாளர்கள், விவசாயிகள், அனைவரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இதை ஏற்றால் இந்த முடிவு அமெரிக்காவையே அழித்துவிடும். நமது தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் சிறந்த அமெரிக்க தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த வரிவிதிப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் நம் தேசத்தை காப்போம். அமெரிக்காவை மீண்டும் வலிமையான, சக்தி வாய்ந்த, பணக்கார நாடாக மாற்றுவோம். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.