
டெல்லி: ஆக. 30-
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் ஊடுருவி வருவதால், நம் நாட்டில் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது. நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள அவர்களை உடனடியாக வெளியேற்றவும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக, மேற்கு வங்கம், அசாம், மணிப்பூர், மிசோரம் என எல்லையோர கிராமங்களில் ஊடுருவியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை, மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
மொழி பிரிவினை
மேற்கு வங்கத்தில், வங்க மொழி பேசுபவர்களை வெளியேற்றும் பா.ஜ.,வின் செயலுக்கு மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘நாடு முழுதும் உள்ள வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தை பா.ஜ., கட்டவிழ்த்து விடுகிறது.
‘அக்கட்சி, வங்க அடையாளத்தை அழித்து வருகிறது. வங்க மொழி பேசும் முஸ்லிம்கள், நம் நாட்டின் குடிமகனாக இருந்தாலும், அவர்களை பா.ஜ., வெளியாட்களாக நடத்துகிறது’ என, அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்த சூழலில், ‘வங்க அடையாளத்தை அழிக்க வேண்டாம்’ என, பா.ஜ.,வை, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தியுள்ளது. சித்தாந்த ரீதியாக அக்கட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., மேற்கு வங்கத்தில், வங்க மொழி பேசுவோர் மீதான தாக்குதலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. ‘ஊடுருவல் நடவடிக்கையின் போது, வங்கமொழி பேசும் இந்தியர்களை குறிவைக்க வேண்டாம்’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஒருவர் வங்க மொழி பேசுவதால், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என அர்த்தமல்ல. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான இந்திய குடிமக்கள் வங்க மொழி பேசுகின்றனர்; இந்த நிலத்தில் ஆழமான வேர்களை அவர்கள் கொண்டுள்ளனர். ’ இந்த மக்கள் துன்புறுத்தப்படவோ அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்படவோ கூடாது. இது அரசியலைப் பற்றியது மட்டுமல்ல; அடையாளத்தையும் வரலாற்றையும் மதிப்பது’ என்றார்.