மிசோரமில் 8000 கோடியில் பிரம்மாண்டம்.. 55 பாலம், 48 சுரங்கப்பாதை

டெல்லி:செப்.1- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் உள்ள மிசோரம் மாநிலம் 91 சதவீதம் காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்கு அடுத்தபடியாக மிசோராம் மாநிலத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.8,071 கோடியில் 55 உயரமான பாலங்கள், 48 சுரங்கப்பாதைகளுடன் சவால் நிறைந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சாலை வழியாக கடக்க 7 முதல் 10 மணி நேரம் ஆகிவந்தது. இனி வெறும் ஒன்றரை மணி நேரத்தில் போக முடியும். இதில் தமிழ் என்ஜினியர்களின் பணி அளப்பரியது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உலகின் வித்தியாசமான பல கலாசாரத்தை பண்பாட்டை கொண்ட மாநிலம் மட்டுமல்ல.. நிலப்பரப்பிலும் மிகவும் வித்தியாசமான பல்வேறு பகுதிகளை கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இமயமலையில் இருக்கின்றன. இமயமலை என்பது காஷ்மீர் தொடங்கி கீழே மிசோரம் , அருணாச்சல பிரதேசம் வரை நீள்கிறது. இதில் வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் ரயில் போக்குவரத்து இன்று வரை கிடையாது. குறிப்பாக மலைப்பகுதிகளை கொண்ட மாநிலங்களுக்கு ரயில் பாதைகள் எட்டாத கனவாக இருந்து வந்தன. சில்சார் டூ பைராபி அந்த வகையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன போதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படாமல் இருந்து வந்தது. மிசோரமின் ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது. ஜஸ்வாலை இணைக்க பாதை இவ்வழித்தடத்தின் ரயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் தூரம் ஆகும். ஆனால் பெரும்பாலும் அசாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடம் இருக்கிறது. வெறும் 5 கிலோமீட்டர் தூரத்துக்குத்தான் மிசோரம் மாநிலத்தில் ரயில் பாதை இருந்தது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைத்து மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரெயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர கடந்த 1999-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில் இருந்த இடம் ஆகும். ஆனால் இந்த திட்டம் கடும் சவால்கள் மற்றும் செலவுகள் காரணமாக செயல்படுத்தப்படாமலேயே கைவிடப்பட்டது.அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பைராபி-சாய்ராங் ரயில் பாதை தற்போது ரயில் போக்குவரத்துக்கு ரெடியாகிவிட்டது. இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரயில்நிலையம் அற்புதமாக மாறி உள்ளது. ராஜதானி ரயில் சேவைகள் இயக்கப்படும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.8,071 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைத்துள்ளது.